Wednesday, October 28, 2009

புவி வெப்பமாதல் ஒரு விஞ்ஞானத் தில்லுமுல்லு!

புவி வெப்பமாதல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வளரும் நாடுகளின் எதிர்காலத்துடனும் பல லட்சம் கோடி ரூபாய்களுடனும் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்னை.


புவியின் சராசரி வெப்பத்தின் அளவு அதிகரித்துவருகிறது. வளி மண்டலத்திலுள்ள கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிப்பதுதான் இதற்கான முக்கிய காரணம் என்பதே புவி வெப்பமாதல் கருதுகோளின் அடிப்படை. ஆகையால், பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தியை - குறிப்பாக, கரியமில வாயுவின் அடர்த்தியைக் குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதே இப்பிரச்னைக்கான முடிவாகக் கருதப்படுகிறது.  



கரியமில வாயு அதிகரிப்புக்கு மிக முக்கியமான பெட்ரோலியப் பொருள்கள் பயன்பாட்டை வெகுவாகக் குறைப்பதும் அதிக மாசற்ற "செம்மையான இயந்திரவியல்' கொள்கைக்கு மாறுவதும் புவி வெப்பத்தைத் தணிக்க முக்கியத் தீர்வுகளாக முன்வைக்கப்படுகின்றன.  

"செம்மையான இயந்திரவியல்' என்பதை விரிவான பொருளில் சொல்வதென்றால், இப்போதுள்ள பழைய தொழில்நுட்பத்தை அப்படியே கடாசிவிடுவது என்பதேயாகும். விறகு அடுப்புக்குப் பதில் சூரிய சக்தி அடுப்பு என்பதில் தொடங்கி ஹைட்ரஜனில் இயங்கும் மொபெட்டுகள், ஹைபிரிட் கார்கள் வரை எல்லாமே புதியவையாகும். "கார்பன் கிரெடிட்ஸ்' வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் (ஏற்கெனவே, தூய்மையான முன்னேற்றத் தொழில்நுட்பத் திட்டங்களில் (சிடிஎம்) 32 சதத் திட்டங்களில் இந்தியா பங்கேற்றுள்ளது).  

இன்றைய தேதியில் உலகிலுள்ள பெரும் தொழிற்சாலைகளை மட்டும் "செம்மையான இயந்திரவிய'லின் கீழ் கொண்டுவர மட்டுமே ரூ. 16 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது, 2030-ல் உலக மாசு அளவை 2007 அளவுக்குக் கொண்டுவர ரூ. 20 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார்கள்.  

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்-இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களாக வளர்ந்த நாடுகளே இருக்கிறார்கள் என்பதாகும். அதாவது மாசற்ற உலகுக்கான இந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளை ஈட்டித் தரும்.  

இந்தியாவின் கரியமில வெளியீட்டில் சரி பாதி அளவு இந்தியத் தொழிற்சாலைகளால் வெளியிடப்படுவதாக வளர்ந்த நாடுகள் குற்றஞ்சாட்டும் நிலையில், "செம்மையான இயந்திரவிய'லுக்கு மாற இந்தியத் தொழில்துறை எத்தனை லட்சம் கோடிகளைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதும் சர்வதேசத் தொழிற்போட்டியில் இந்தியாவுக்கு இந்தச் செலவு எத்தகைய பின்னடைவுகளை உருவாக்கும் என்பதையும் விவரிக்க வேண்டியதில்லை.  உண்மையில், கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க முதலில் தலைப்பட வேண்டிய நாடு அமெரிக்காதான். 

தனி நபர் கரியமில வாயு உமிழ்வு அமெரிக்காவில் 19.70 மெட்ரிக் டன்களாக இருக்கிறது. இந்த உமிழ்வு ரஷியாவில் 11 மெட்ரிக் டன்களாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 9.17 மெட்ரிக் டன்களாகவும், இந்தியாவில் 1.31 மெட்ரிக் டன்களாகவும் இருக்கிறது. மேலும், 2030-ல்கூட இந்தியாவில் தனிநபர் ஆண்டு கரியமில வாயு உமிழ்வு உலக சராசரியான 4.22 டன்னை தாண்ட வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

ஆனால், மாசின் உச்சத்திலிருக்கும் அமெரிக்கா இன்னமும் கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க சர்வதேச ஒப்பந்தங்கள் எதிலும் கையொப்பமிடாத நிலையில், இந்தியாவையும் சீனாவையும் நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏனைய வளர்ந்த நாடுகளும் அமெரிக்காவுக்கு ஒத்தூதுகின்றன.  

புவி வெப்பமாதல்பற்றி முதல் பேச்சு எழுந்த காலத்திலிருந்தே இந்தக் கருதுகோளே தவறு என்ற பேச்சும் வலுவாகத் தொடர்கிறது. ""புவி வெப்பமாதலும் குளிர்தலும் தொடர்ந்து சங்கிலித் தொடராக நிகழ்ந்துகொண்டிருப்பவை; இயற்கைச் சீர்கேடுகளுக்கும் இந்தக் கருதுகோளுக்கும் தொடர்பில்லை'' என்று ரஷிய விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.  ""புவி வெப்பமாதல் மிகப் பெரிய விஞ்ஞான தில்லுமுல்லு'' என்கிறார் ரஷிய விஞ்ஞானி ஆந்த்ரே காப்டிசா. இது தொடர்பாக அண்டார்டிகாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ள அவர், 1970-களில் பெரிதாக இப்படிக் கிளப்பிவிடப்பட்ட புவி குளிர்மயமாதல் இப்போது புஸ்வாணமாகிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். வளரும் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளும் ஓர் உத்தியே புவி வெப்பமாதல் கருதுகோள் என்று ரஷிய விஞ்ஞானிகள் தீவிரமாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

இது ஒருபுறமிருக்க, ""மாசடைந்துவரும் சூழல் - அருகிவரும் இயற்கை வளங்கள் - மாறிவரும் தட்பவெப்பம் ஆகியவை புவிச் சூழலில் மிகப் பாதகமான அம்சங்களே. ஆனால், பூமி ஓர் உயிருள்ள செல். தன்னைத்தானே தகவமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை புவிக்கு இருக்கிறது'' என்ற கருதுகோளும் காலங்காலமாக விஞ்ஞானிகளிடையே இருந்து வருகிறது.  புவி வெப்பமாதலின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக இருக்கும்போது அதன் பெயரால் முன்வைக்கப்படும் தீர்வுகள் எந்த அளவுக்கு நம்பகமானவை?  

புவி வெப்பமாதலுக்கு முன்வைக்கப்படும் தீர்வுகளை, நிர்பந்தங்களை ஏற்றுக்கொண்டால், அதனால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நாடாக இந்தியாவே இருக்கும். தொழில்துறை சார்ந்து மட்டுமல்ல; இன்னமும் மின்சாரத்தைப் பார்க்காத கோடிக்கணக்கான இந்தியக் கிராமவாசிகளையும்கூட அது பாதிக்கும்.  அனல் மின்சாரத்துக்கு மாற்றாக அவர்களுடைய உள்நோக்கம் அணு மின்சாரத்தை விற்பதாகவே இருக்கிறது. பெட்ரோலியப் பொருள்களுக்கு மாற்றாக உயிரி எரிபொருளையே முன்வைக்கிறார்கள்.  இதனால், ஏற்படும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டுக்கு மாற்றாக மரபீனி மாற்றுப் பயிர்களை முன்வைக்கிறார்கள். 

உண்மையில் இவையெல்லாம் இப்போதுள்ள சூழலியல் அபாயங்களைவிடவும் பேரபாயங்களையே தோற்றுவிக்கும்.  கட்டாய மழைநீர் சேகரிப்பு, கிராமங்கள்தோறும் பாசனக் குட்டைகள் அமைத்தல், கட்டாய மர வளர்ப்பு, வனப்பரப்பை அதிகரித்தல், திட, திரவக் கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கட்டுப்பாடு, சூழலுடன் இயைந்த தொழில் வளர்ச்சித் திட்டம், நதிகள், கடல், காற்று மாசுக்களைத் தடுத்தல்... இப்படிச் சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்தியா மேற்கொள்ள வேண்டிய காரியங்கள் ஏராளம். இவற்றையெல்லாம் தீவிரமாக அரசு செயல்படுத்தலாம்.  

ஆனால், வளர்ந்த நாடுகளின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து அவற்றின் நிலைப்பாட்டுக்கு ஒத்திசைத்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கும் அடிப்படைக் கட்டமைப்புக்கும் அது பெரும் ஆபத்தையே விளைவிக்கும். இன்னொரு வரலாற்றுத் தவறுக்கு வழிவகுக்கும்!

Courtesy: Dinamani

No comments: